Sunday, 25 September 2011

கட்டாந்தரையில் படுத்தாலும்..?

பட்டுத் தலையணையோ பஞ்சு மெத்தையோ வேண்டாம். கட்டாந்தரையில் படுத்தாலும் சட்டுன்னு தூங்கிருவார் தாத்தா. ஆனா, இலவம் பஞ்சுத் தலையணை, புதையுமளவுக்கு மெத்தை இருந்தாலும் தூக்கம் வராம ராத்திரியில குறுக்கும் நெடுக்குமா நடந்து கிலியைக் கிளப்புவாங்க பாட்டி.

பழகின இடம், பழக்கமான தலையணை,அளவான வெளிச்சமில்லேன்னா எனக்குத் தூக்கம் வராதுன்னு சொல்லி, கல்லூரியிலிருந்து கொடைக்கானல் டூர் போனப்போ எங்களுக்கெல்லாம் காவல்மாதிரி கொட்டக்கொட்ட முழிச்சிட்டே இருந்தா என் தோழி ஒருத்தி.

என் தோழியின் முதல் குழந்தைக்கு ஒண்ணரை வயசிருக்கும்போதே, அவளுக்கு அடுத்த குழந்தையும் பிறந்துவிட்டது. இரண்டாவது குழந்தையைப் பார்த்ததிலிருந்து ஏங்கிப்போன மூத்த குழந்தை, தன்னுடைய தலையணையே கதியென்று ஆகிப்போனது. எப்பவும் அந்தச் சின்னத் தலையணையைக் கிட்டவே வைத்திருக்கும். உறக்கம் வந்தால் தம்பியைத் தூக்கிவைத்திருக்கும் அவங்கம்மாவை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் ஒற்றை விரலுடன் அந்தத் தலையணையைக் கட்டிக்கொண்டு உறங்கிப்போகும்.பார்க்கப் பாவமாக இருக்கும். இதைப் பார்த்து, குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஆளில்லாமலிருந்த என் தோழியும் கண்ணீர் விடுவாள்.

நாளாக நாளாக அந்தத் தலையணை இல்லாமல் தூங்கவேமுடியாது என்று குழந்தை அடம்பிடிக்குமளவுக்கு ஆகிவிட்டது. ஊருக்கு வந்தால் அந்தத் தலையணையின் உறையைமட்டும் மறக்காம எடுத்து வருவாள் அவள். போகிற இடத்திலெல்லாம், அந்த உறைக்குப் பொருந்துவதுமாதிரி மகளுக்கு இன்னொரு சின்னத் தலையணையைத் தயார்செய்து கொடுப்பாள்.

குழந்தைதான் இப்படின்னா, அவங்க தாத்தா அதைவிட மோசமாம். படுக்கும்போது தலைக்கு மொத்தமாக நாலு தலையணை வேணுமாம். அதையும்,அடுக்கிவைப்பதிலும் ஒரு வரிசை வச்சுக்குவாங்களாம். யாராவது மாத்தி அடுக்கிட்டா, மறுபடியும் எழுந்து உட்காந்து அடுக்கிட்டுதான் படுத்துக்குவாங்கன்னு சொல்லுவா. வீட்டுக்கு எத்தனை விருந்தாளிகள் வந்தாலும் யாரு தலையணையில்லாம படுத்தாலும் அவங்களுக்கு நாலு தலையணை வேணும். அதில் அவங்க படுத்திருக்கிறதைப் பார்த்தா படுக்கையில சரிஞ்சு உட்கார்ந்திருக்கிறமாதிரியே இருக்கும்னு சொல்லுவாள் அவள்.

தலையணைக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும் தலையணையைக் கண்டாலே படுத்துக்கணும்னு தோன்றுவது எல்லோருக்கும் இயல்புதான். காலுக்கு ஒரு தலையணை கைக்கு ஒரு தலையணைகூட வச்சுக்குவாங்க சிலர்.

உடம்பில் ஏற்படும் வலிகளைத் தீர்க்க, தலையணைகள் ரொம்பவே உதவுதுன்னு சொல்லலாம். தோள்பட்டை வலியிருக்கிறவங்க, எந்தத் தோள்பட்டை வலிக்கிறதோ அந்தப்பக்கம் மெல்லிய தலையணையையோ, அல்லது மடித்த போர்வையொன்றையோ கைக்குக்கீழே வச்சுக்கிட்டா தோள்பட்டை வலிகுறையும்னு அனுபவப்பட்டவங்க சொல்லுவாங்க.

அதேமாதிரி கழுத்து வலியுள்ளவங்க அதிகமான உயரமில்லாத தலையணையை வச்சுக்கலாம். அதிலும் கீழேயிருக்கிறமாதிரியான தலையணை, கழுத்துவலியுள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இந்தத் தலையணையில், நேராகப் படுக்கவும் ஒருக்களித்துப்படுக்கவும் இரண்டு பக்கமும் வித்தியாசமான உயரத்தோடு இருக்கும்.


 இது நம்ம ஊரில் கிடைக்குதான்னு தெரியல, ஆனா இங்கெல்லாம் கிடைக்கிறது.

முதுகுவலி, இடுப்புவலியிருக்கிறவங்க, காலுக்கும் ஒரு தலையணை வச்சுக்கலாம். காலுக்கடியில் தலையணை வைத்துக்கொள்வதால, முதுக்குப்பகுதி நன்றாக படுக்கையில் பதியும். அதனால் முதுகுவலியும் குறையும் என்கிறார்கள்.

0 கருத்துக்கோவை:

Post a Comment